Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரைத் திருமணங்களில் கொல்லைப்புற தட்சணைகள் !? 66

அதிரைநிருபர் பதிப்பகம் | May 27, 2013 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

கடந்த ஒரு மாதமாக அதிரையிலும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் திருமண சீசன் என்பது எல்லோரும் அறிந்ததே. அதிரையில் திருமணம் களைகட்டுகிறது என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதெப்படி அதிரை திருமணங்கள் களைக்கட்டுகிறது என்பதை இந்தப் பதிவில் கொஞ்சம் மற்றொரு கோணத்தில் பார்ப்போம்!

ஒரு காலத்தில் வசதியானவர்கள் வீட்டுத் திருமணத்தில் பூவந்தி போன்ற நார்ஸாவும், மார்க்கம் வலியுறுத்திய வலிமாவாக தேங்காய்ச் சோறுடன் / நெய்ச்சோறுடன் 5 கறி சாப்பாடு அல்லது ஆட்டு இறைச்சி பிரியாணியும் சொந்தங்களுக்கும், வறியவர்களுக்கும் விருந்தாக இருந்தது. பிறகு உண்மையில்லாத கவுரவத்தை தலையில் சுமந்து, வரதட்சணை மூலம் போலி வசதி வாய்புகளை பெற்று, அவற்றை மூலதனமாக வைத்து ஊராருக்கு பகட்டு காட்ட தங்களுடைய சக்திக்கு மீறிய திருமண வைபவங்களில் வரம்பு மீறி செலவழிக்க தொடங்கினார்கள் மேலும் பலர். 

பின்னர் ஏகத்துவ பிரச்சார எழுச்சியால், பகிரங்கமாக வற்புறுத்தி வாங்கப்பட்ட வரதட்சணைகள் என்ற கேவலமான செயலை முஸ்லீம்களிடம் அழித்தெறிய அரும்பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டார்கள். ஆனால் நேரடியாக வரதட்சணை மூலம் கொள்ளையடித்த மணமகன் வீட்டார் வேறொரு வேடம் தரிக்க ஆரம்பித்து என் மகன் நஜாத்து, தவ்ஹீத் கொள்கைவாதி வரதட்சணைப் பணமா வாங்கினா ஏசுவான் என்று ஊராரிடம் பெருமையடிப்பது ஒரு புறமிருந்தாலும்,  கொல்லைப்புறம் வழியாக சீருசிராட்டு என்று வாங்க வேண்டியதை வாங்குவது வரதட்சணை என்ற கணக்கில் அது வராது என்று சொல்லி பண்ணுகிற அடாவடியும். இதுநாள் வரை குறைந்தபாடில்லை. அவைகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால் நீண்டதொரு லிஸ்டே போடலாம். முன்கூட்டியே முடிவு செய்யப்படும் அந்த கைக்கூலியான வரதட்சணையே இந்த கொடுமைகளுக்கு தேவலாம் என்ற எண்ணத்திற்கு பெண் வீட்டார் தள்ளப்படுகிறார்கள். 

அப்படி என்னதான் நடைபெறுகிறது இதோ பின்வரும் தகவல்கள் ஓர் உண்மை(யான) காட்டு, மாறாக எந்தவொரு குடும்பத்தையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற துளியளவு எண்ணத்தில் இது பதிக்கப்படவில்லை. மார்க்க வரம்பு, நபிவழி, வீண் விரையம் செய்ய வேண்டாம், என்று ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லுபவர்களே இதுபோன்ற காரியங்களுக்கு துணை போகிறார்கள் அல்லது கண்டும் காணாதவாறு உள்ளார்களே என்ற ஆதங்கத்தினாலே பதிக்கப்படுகிறது. இவ்வாறு சுட்டிக் காட்டப்படுபவைகள் ஏன் நமது வீடுகளில் கூட நடைபெற்றிருக்கலாம், இனி அவ்வாறு நடைபெறாமல் இருக்க நாம் துணிந்து போராட வேண்டும், அதற்காக வீட்டாரை தயார்படுத்த வேண்டும் இன்ஷா அல்லாஹ்.

களைகட்டும் அதிரை திருமணங்களில் உண்மையில் களைகட்டுகிறதா என்று பார்ப்போம்.
  • மணமகன் முதுநிலை பட்டதாரி, சென்னையில் வேலை செய்கிறான், திருமணத்திற்கு பின்பு வெளிநாட்டிற்கு போகப்போகிறான். தனக்கு மனைவியாக வரவேண்டியவள் படித்தவளாகவும் மார்க்க பற்றுள்ளவளாகவும், ஒழுக்கமுள்ளவளாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்பது அவனின் கண்டிசன்.
  • மணமகன் குடும்பம் நல்ல வசதியான குடும்பம், வரதட்சணை எல்லாம் நாங்க வாங்க மாட்டோம், வரதட்சணை வாங்குவது கேவலம் என்று ஒரு மெகா சீரியல் பிரச்சாரம் செய்யும் குடும்பம். எங்கள் வீட்டில் யாருக்கும் நாங்க வரதட்சணை வாங்கியதில்லை, இனியும் யாருக்கும் வாங்க மாட்டோம். சொந்த வீடு ஊரிலும், பிற ஊர்களில் நிலங்களும் உள்ளது.
  • மணமகள், இளநிலை பட்டதாரி, ஆலிமாவும் கூட.
  • மணமகள் குடும்பம், தாய் பள்ளிக்'கொடம்' தாண்டி பள்ளிகூடம் தாண்டாவர்கள் ஆனால் மூத்த மகளை நல்லவளாக வளர்த்து சாதனை படைக்க வைத்தார்கள். கூடப்பிறந்தது ஒரு தங்கை, ஒரு தம்பி அனைவரும் நன்றாக படிக்கிறார்கள். தந்தை 23 வருடமாக வெளிநாட்டில் வேலை பார்த்து, தன்னுடன் பிறந்த ஒரே காரணத்திற்காக (அதிரையின் விதிப்படி) தன் இரு சகோதரிமார்களுக்கும் தனி வீடுகட்டி கொடுத்து, மீதியை தனது மூத்த பிள்ளைக்கு மட்டும் தனி வீடு கட்டி வைத்திருக்கும் ஒரு நடுத்தர சராசரி வரு’மானமுள்ளவர்’. மகள் திருமணத்திற்கு பிறகு அடுத்த மகளுக்கு வீடுகட்ட வெளிநாடு சென்றால் தான் முடியும் என்ற எழுத்தப்படாத விதி வேறு உட்பிரிவாக இருக்கிறது. 46 வயதான தகப்பனுக்கு High-BP, அடிக்கடி வரும் ஒற்றை தலைவலி (migraine) என்பது வேதனையான அந்த வயதுக்கேற்ற medical qualifications. பயிற்சிமுறை உணவு உட்கொள்ளும் மருத்துவ ஆலோசனைகளைக் கடைபிடித்து தன்னுடைய நோயை குணப்படுத்தி வந்தவருக்கு, மகளின் திருமணத்திற்காக பணம் ஏற்பாடு செய்யும் டென்ஷனில் மீண்டும் ஆங்கில மருந்துகளுக்கு அடிமையாகி போனவர்களில் இவரும் ஒருவர். ஆனால் தன்னுடைய மகள் கண்கலங்காமல் வாழனும் என்பதற்காக திருமண வேலையில் சுறு சுறுப்பாக ஈடுபடுகிறார்.
என்று மணமக்கள் குடும்பங்கள் பற்றிய குறிப்புகள்.

இதோ வரதட்சணை வாங்காத மணமகன் வீட்டாரின் கொல்லைப்புற அடாவடித்தனங்களைப் பார்ப்போம்.

1. பெண் பார்க்க வருகிறார்கள், எப்படியும் குறைந்தது 50 பேர்களுடன்
வருபவர்களுக்கு டி, பிஸ்கட்டு, மிக்சரு, 10 சஹன் அல்வா, டீ பிடிக்காதவர்களுக்கு ரோஸ் மில்க். இவ்வாறாக 13,000 ரூபாய் மணமகள் வீட்டு செலவு.

2. பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று மாப்பிள்ளை வீட்டார் சொல்லி விட்டார்கள். அவங்க வரதட்சணைதான் வாங்கல, ஏதாச்சும் பண்ணிக்குடுக்க வேண்டாமா என்று 50 முர்தபாவும், கோழி பெரட்டலும், அனுப்பி வைக்கிறோம் என்று தூதுவர்கள் (இவர்களை பற்றி ஒரு தொடரே எழுதும் அளவுக்கு தூதுச் செய்திகள் இருக்கிறது) மூலம் மணமகன் வீட்டிற்கு சொல்லியனுப்பியாச்சு. 

வரதட்சணை வாங்காத அந்த புண்ணியக் குடும்பத்தில் உள்ள பெரிய மனுசியொருவர், சீர் செய்தியோடு வந்த தூதுவரிடம் “நாங்க பெரிய பிச்சளம் 50 முர்தபாவுலாம் பத்தாது, 200 முர்தபா அனுப்ப சொல்லுவுள” என்று சொல்லிவிட. அதுவும் ரெடியாகி அடுத்த நாளே மணமகன் இல்லத்திற்கு அவர்கள் கேட்ட 200 முர்தபா, கோழி பெரட்டல் அனுப்படுகிறது. 

இப்படி கொஞ்சம் கொஞ்சமா சீருசீராட்டுகள் நடைபெறுவதைக் அங்கொன்றும் இன்கொன்றும் கண்ட மணமகன், “ஏம்மா இதெல்லாம் வாங்குறீங்க, மார்க்கத்துல கூடாதும்மா” என்று கேட்க. “இல்ல வாப்பா நாமலா கேட்கல, எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க, வானா வானாங்க அனுப்புறாங்கம்மா. நாமலா கேட்டு வாங்கினாத்தானே பாவம், அவர்களா தந்தா அது தப்பில்லை வாப்பா” என்று சொல்லி மணமகனின் வாயை பஞ்சு வைத்து அடைக்கப்பட்டாகி விட்டது.

தன் குடும்பம் இது வரை மணமகள் வீட்டாரிடம் வாங்கிச் சாப்பிட்ட பிறகு, அந்த நிலையிலாவது மணமகன் வீட்டார் வாங்கியவைகளை திருப்பி கொடுத்தால்தான் நான் கல்யணம் செய்து கொள்வேன் என்று சொல்ல அந்த மணமகனை திடமற்றவனாக மாற்றி விடுகிறது குடும்ப கவுரவமும், தாய் பாசமும். ஆக 40,000/- மணமகள் வீட்டு செலவு.

3. திருமண கூப்பாட்டில் மணமகள் வீட்டார், மணமகனின் மாமாவையோ அல்லது சாச்சாவையோ அல்லது பேசிமுடித்துக் கொடுத்த மாமியையோ ஞாபக மறதியால் கூப்பிட தவறிய அந்த செய்தி மாப்பிள்ளையின் உம்மாவுக்கு தெரிய வந்தால், அவ்வளவுதான் மிகப்பெரிய வார்த்தைப் போர் ஆரம்பமாகிவிடும். இது ஒன்னு போதும் தலைமுறை தலைமுறையாக குறை சொல்ல. சரி மறந்துவிட்டோம் என்று, திருமணத்திற்கு ஒரு நாளைக்கு முன்பு திரும்பப் போய் அந்த மனுசனை / மனுசியை கூப்பிட போனால், உலக கவுரவக்காரர்களின் சங்கத் தலைவர் போல் இருந்து கொண்டு வறட்டு பிடிவாதத்தோடு செய்யும் சாட்டித்தனத்தால், மணமகளில் தந்தைக்கு இருக்கும் BP வியாதியை, இருதய நோயாகும் நிலைக்கு கொண்டு செல்லும் அளவுக்கு கூப்பிட மறந்த உறவுக்காரர்கள், மணமகள் குடும்பத்தை அலைக்கழிப்பார்கள்.

4. “இன்று இரவு 8 மணிக்கு செப்பு சாமான்களோடு, மணமகளுக்கு முகம் துடைக்க வருகிறோம், என்று சொல்லி நாங்க 50 பேர் வருகிறோம், 100 முர்தபா, கோழி, கடப்பாசி செய்து வைங்க, கடைல வாங்க வேண்டாம், வூட்ல பண்ணுங்க” என்று பகல் 3 மணிக்கு தூதுவர் மூலம் செய்தி அனுப்பப்படுகிறது. “உம்மாடியோவ் திடீர் என்று சொல்லியனுப்பிட்டாகலே, இது பெரிய குடும்பம்லே, வரதட்சணை வாங்காதவோ, புதுசா கேட்டுப்புட்டாஹலே” என்று மணமகள் வீட்டார், அடுத்த நாள் காலை ‘பசியார’வுக்காக தயாரித்து வைத்திருந்த பெருட்களை அரக்கப்பரக்க தயாரித்து, ஒரு வழியாக கேட்ட உணவு வகைகள் ரெடி. முகம் துடைத்து, சாப்பாடு சாப்பிட்டார்கள், அந்த நேரத்தில் மாப்பிள்ளையோட மாமிக்காரி ஒருத்தி சாப்பாட்டில் கோழி வெந்து கரைஞ்சு போச்சு என்று பெண் வீட்டாரிடம் பிரச்சினை பண்ணி, சந்தோசமாக இருக்க வேண்டிய அந்த இரவில் பெண்ணை பெற்றவர்களுக்கு பக் பக் என்று விடியும் வரை ஈரக்கொலையில் ஒரே படபடப்புதான். அன்றைய இரவு திடீர் விருந்தின் செலவு 20,000 ருபாய்.

5. பொதுவாக திருமண தினத்தில் நார்ஸா மணமகள் வீடு தான் கொடுப்பது வழக்கமாக உள்ளது. பெண் வீட்டின் வசதிக்கு தகுந்தாற் போல் பிஸ்கட், தம்ரூட், பூவந்தி என்று கொடுப்பார்கள். இதன் பின்னனி நிறைய பேர்களுக்கு தெரியாது. நிறைய வீடுகளில் வரதட்சணை வாங்க மாட்டோம் என்று சொல்லும் மணமகன் வீட்டார் தான் முடிவு செய்கிறார்கள். என்ன நார்சா மணமகள் வீட்டார் கொடுக்க வேண்டும் என்று. அந்த நார்ஸா எவ்வளவு விலையானாலும் பெண் வீட்டார் தான் வாங்க வேண்டும். இந்த கொடுமை வரதட்சணை வாங்கவில்லை என்று மார்தட்டிக் கொள்ளும் மாப்பிள்ளை வீட்டாரால் நடத்தப்படுகிறது. நார்சாவுக்கு என்று 5,000 ரூபாய் பட்ஜெட் என்று எண்ணிய பெண்ணின் தந்தைக்கு மேலும் 45,000 ரூபாய் கூடுதல் செலவு.

6. வரதட்சணை தான் நாங்க வாங்கவில்லை, காலை பசியார 100 சஹன் தாருங்கள் என்று கேட்டு வாங்கிய பின்பும், சாப்பாடு பற்றாக்குறை என்று சொல்லி மீண்டும் மணமகள் வீட்டாரிடம் இன்னும் 25 சஹன் அனுப்புங்கள் என்று கல்யாண காலைல கொடுக்குற இனிமா இருக்கிறதே. அல்லாஹு அக்பர். மாப்பிளை வீட்டுக்கு காலை பசியார செலவு: 1,25,000/- ரூபாய்.

7. திருமணம் முடிந்த நாள் முதல் குறைந்த பட்சம் 3 நாட்களுக்காவது, மாப்பிள்ளையுடன், மணமகள் வீட்டிற்கு காலை பகல் இரவு என்றும் அதனைத் தொடர்ந்து திருமணநாள் வர இயலாதவர்கள் லிஸ்ட் என்று ஒன்று போட்டு அவர்களுக்கு சாப்பாடு என்று எகிறும் செலவினங்களை நினைத்தால் கண்ணை கட்டும். உம்மாடி இந்த குடும்பத்திலையா நாம சம்பந்தம் கலந்தோம் என்று பெருமூச்சுவிட வைக்கும் பெண்ணை பெத்தவர்களுக்கு. மணமகள் இல்லத்தில் அந்த 3 நாட்களுக்கு ஏற்படும் செலவு ரூ 50,000/-.


இப்படி கொல்லைப்புறத்து வரதட்சணை லிஸ்ட்டை சொல்லிக் கொண்டே போகலாம். மேலே சொல்லப்பட்டவைகளில் சில நாம் சந்தித்திருக்கலாம், ஆனால் அத்தனையும் ஊரில் நடைபெறுகிறது, மேலும் நிறைய கொல்லப்புர வரதட்சணை கொடுமைகள் நடைபெறுகிறது.

மேலே சொல்லப்பட்டவைகளில் இருந்து கணக்கிட்டு மொத்தம் பார்த்தால், 2,98,000/- ரூபாய் தெருவாசல் வழியாக வரதட்சணை வாங்காத திருமணத்திற்கு கொல்லைப்புறத்தில் கொடுக்கப்பட்ட வரதட்சணைக்கு ஏற்பட்ட செலவும் (இவைகள் தோராய பட்ஜெட்).

வரதட்சணை வாங்காத தவ்ஹீத் மாப்பிள்ளை, தப்லீக் மாப்பிள்ளை என்று வெளிப்புறத்தில் ஒரு தோற்றம், சீர் சீராட்டு, பசியாற, முகம் துடைப்பு சாப்பாடு, பெண் பார்த்தல் உணவு என்று மறைமுகமாக வரதட்சணை வாங்கப்படுவதை கண்டு கொள்ளாமல் இருப்பது மற்றொரு புறம். இது தான் நபி வழியா? இதற்கெல்லாம் எங்கே ஆதாரம் உள்ளது?

இவைகள் திருமணம் விருந்து உபசரிப்பு என்று நமக்கு மேலோட்டமாக தெரிந்தாலும், வெளித்தோற்றத்தில் நடைபெறும் ஒவ்வொரு திருமண தினத்திலும் பெண்ணை பெற்றவர்கள் சந்தோசமாக இருப்பது போல் தெரிந்தாலும், அந்த திருமண நிகழ்வுக்கு பின்னால் நாம் மேற்சொன்ன மணமகன் வீட்டாரின் அடாவடிகளால் பொருளாதார ரீதியாகவும் உளரீதியகவும் பாதிக்கப்பட்ட பெண்ணை பெற்றவர்களின் சோகக்கதைகள் எண்ணிலடங்காதவை. பெண் பிள்ளை திருமணத்திற்கு பின்பு சந்தோசமாக இருந்தாலும், பேரக்குழந்தைகள் கிடைத்தாலும், தட்டுத் தடுமாரிய தருணங்களில் திருமண நேரத்தில் மணமகன் வீட்டார் செய்தவைகள் மறக்க முடியாத நிகழ்வாகவே நிலைத்து விடுகிறது.

இங்கு குறிப்பிட்டது அல்லாமல், இன்னும் 'சீர்'கேடுகளும் இருக்கத்தான் செய்கிறது, பின்னூட்த்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். இவைகள் அனைத்தும் படிப்பினை பெறுவதற்கே அன்றி வேறில்லை !

இது போன்ற வரதட்சணைகள், சீர்களை அறவே புறந்தள்ளிவிட்டு மிகவும் எளிமையாக, செலவுகள் குறைவாகவும், வீண் விரையம் இன்றியும் திருமணங்களும் நமதூரில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

சீர் என்று மாற்று பெயரில் இருக்கும் இந்த வரதட்சணை நம் சமூகத்திலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும். பெண் வீட்டார் இவ்விசயத்தில் இனி கண்டிப்புடன் இருக்க வேண்டும்.

அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்ளுங்கள் அது உங்களுக்கிடையே அன்பை வளர்க்கும் - நபிமொழி, ஆனால் கேட்டுப் பெறுவதற்கு அன்பளிப்பு என்ற ஒரு போர்வை நபிவழியல்ல, அது யாசகம் !

நபிவழிக்கு புறம்பான இத்தீய காரியமான சீர்களுக்கு நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவுகள் அளித்து வந்திருந்தால், அல்லாஹ்விடம் தவ்பா செய்வோமாக. இது போன்ற பாவங்களிலிருந்து நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக. ஆமீன்.

அதிரைநிருபர் பதிப்பகம்

66 Responses So Far:

Ebrahim Ansari said...

எனக்குத் தெரிந்து ஒரு திருமணம்.

மாப்பிள்ளை தவ்ஹீது இயக்கத்தில் இருப்பவர். பெண் வீட்டில் பெண்ணுக்காக சேர்த்துவைத்திருந்த நகைகளைப் போட்டுவிட்டார்கள். பெண்ணை அனுப்பும்போது எவ்வளவு நகை போட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். முப்பத்தி ஐந்து பவுன் என்று பெண்வீட்டார் சொன்னார்கள்.

அடுத்த இரண்டு நாள் கழித்து பெண் வீட்டின் பொறுப்பாளியை தவ்ஹீது மாப்பிள்ளையின் பொறுப்பாளி வீட்டுக்கு அழைத்து கையில் ஒரு பேப்பரைக் கொடுத்தார்கள்.

அதன்படி பெண்ணுக்குப் பெண் வீட்டார் போட்ட நகைகளின் லிஸ்டும் அதை ஒவ்வொன்றாக எடை போட்டுப் பார்த்த விபரமும் இருந்தது. அதில் நகைளை கோர்க்கப் பட்ட நூலின் எடை, பவளத்தின் எடை, கற்களின் எடை யாவும் ஒரு பொற்கொல்லரால் அளவிடப்பட்டு கழிக்கப்பட்டு முப்பத்தி ஐந்து பவுன முழுதாக இல்லை. ஆகவே மேலும் ஐந்து பவுன் குறைகிறது என்று சொல்லி அதையும் போட்டுவிடுங்கள் என்று சொன்னார்கள்.கூலி சேதாரம் ஜாய் அலுக்காசில் மட்டும் சார்ஜ் செய்வதில்லை என்பதற்கு இது உதாரணம்.

வரதட்சணை வாங்காமல் மகர் கொடுத்து மணமுடித்தோம் என்பதெல்லாம் பலர் வெளிப்பகட்டுக்காகவே செய்கிறார்கள். உண்மையில் பெண்களைப் பெற்றோரின் துயரம் குறையவே இல்லை. திருமண விருந்தைக் கூட முழுச்செலவையும் பெண்வீட்டார் தலையில் கட்டிவிட்டு, வலீமா விருந்து கூட கொடுக்காமல் தப்பித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்னொரு முக்கியமான கொடுமை என்னவென்றால் மகர் கொடுக்கப் பட்டு மணம் முடிக்கபப்ட்ட பெண்களை மாமனார் மாமியார் மாப்பிள்ளை ஆகியோர் ஒன்றும் சொல்லாவிட்டாலும் மாப்பிள்ளையின் மற்ற உறவினர்கள் - உடன் பிறந்தோர் - ஒரு இளக்காரமாக பேசுவது- நீ என்ன கொண்டுவந்தாய் என்று குத்திக் காட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்குவது இவையெல்லாம் படித்தவர்கள் மத்தியில் கூட இருந்துகொண்டுதான் இருக்கிறது.

இவைகளும் ஒழிந்தால்தான் உண்மையான நபிவழித்திருமணம் நடைபெற்றதாக அர்த்தம்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்...]

என்னதான் கழுதைபோல் கத்தினாலும் "மனிதனாய் பார்த்து திருந்தா விட்டால்..... "ஒழிக்க" முடியாது.

அது கெடக்கட்டும். காலை ஆறு மணிக்கு அ.நி. திறந்த என்னைக் கவர்ந்தது பெண் வீட்டார் கொடுத்த முர்த்தபா+ரொட்டியும்தான். அதைஅவர்கள் வரதட்சனைக்கு Barter செய்து கொண்டது பெரிய பாவம் அல்ல; என்னதான் ஒளிவு மறவா வாங்குனாலும் அடுத்த வாசல்லே உள்ள என்னை "பசியாற வாங்க மாமா"ன்னு ஒரு வார்த்தை கூப்பிட்டா கொறஞ்சா போயிடும்?. அடி பாவிங்களா.? நீங்க வேற ரொட்டி முர்த்தபா ரெண்டயும் படம் புடிச்சு காலங்காத்தாலே போட்டு காட்டுனியலா அதை பாத்த என் நபுசு பறக்குதுங்க!.

S.முகம்மது பாருக்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நம்மூரில் சில பேர் குறிப்பாக பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சில வீட்டு குமர்களுக்கு அவர்கள் வீட்டில் கேட்டுக்கொண்டோ அல்லது கேட்டுக்கொள்ளாமல் அவர்களாலேயே சில வீடுகளில் மாப்பிள்ளை பார்த்து பேசி முடித்து அந்தக்குமரை கரை சேர்க்க உதவியதற்காக இரு வீட்டினரிடமோ அல்லது பெண் வீட்டினரிடமோ கமிஷன் வாங்கித்திரிகிறார்கள் புரோக்கர்களாக. இவர்களெல்லாம் ஏழை,பாளையமாக இருந்தால் கூட இந்த செயல் பெரும் பாவமே. ஆனால் வீட்டில் நல்ல வசதிவாய்ப்புகளும், பிள்ளைகளின் வெளிநாட்டு சம்பாத்தியங்கள் இருந்தும் இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் குமரை கரை சேர்க்கிறேன் என்று சொல்லி பல குமர்களை பாழும் கிணற்றில் தள்ளிய கதைகளும் உண்டு. நம்மூரில் விவரம் தெரிந்ததாக சொல்லப்படும் பெண்களும், ஆண்களும் எதற்காகத்தான் இந்த அட்டூழியங்களை இன்னும் அரங்கேற்றி வ‌ருகிறார்க‌ள் என‌ தெரிய‌வில்லை.

ப‌ள்ளிக்கூட‌த்தில் முன் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டால் ந‌ல்ல‌ மாண‌வ‌ர்க‌ள் என‌ எல்லோராலும் அழைக்க‌ப்ப‌டுவ‌து போல் ப‌ள்ளிவாச‌லில் முன் ச‌ஃபில் நின்று தொழுது விட்டால் அல்லாஹ்விட‌மும், ம‌க்க‌ளிட‌மும் ந‌ல்ல‌ பெய‌ர் எடுத்து ஈருல‌க‌ பாக்கிய‌ங்க‌ளை எல்லாம் எளிதில் அடைந்து கொள்ள‌லாம் என‌ நினைத்துக்கொண்டார்க‌ள் போலும். அவ‌ர்க‌ள் நினைப்பில் ம‌ண் விழும் கால‌ம் அவ‌ர்க‌ளுக்கு ச‌மீப‌த்திலேயே அல்லாஹ்வால் நிர்ண‌யிக்க‌ப்ப‌ட்டுள்ள‌தை அவ‌ர்க‌ள் நினைக்க‌ ம‌றுக்கின்ற‌ன‌ர்/ம‌ற‌க்கின்ற‌ன‌ர்.

ந‌ம்மூரில் தொண்டுதொற்று வ‌ரும் மார்க்கத்திற்குப்புரம்பான ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளையும், முஸ்லிம் ம‌க்க‌ளின் செய‌ல்பாடுக‌ளையும் எவரேனும் உரிய முறையில் கிண்டிக்கிழ‌ங்கெடுக்க‌ ஆர‌ம்பித்து விட்டால் அதிரையில் பிற‌ந்த எவ‌ரும் ஆன‌ந்த‌ப்ப‌ட‌மாட்டார் வேத‌னைப‌டுவ‌தை தவிர‌..........

தூய‌ மார்க்க‌ப்ப‌டி வாழ‌க்கூடிய‌வ‌ர்க‌ளே அக்கால‌ ச‌ஹாபாக்க‌ளின் தியாக‌ங்க‌ளைத்தாண்டி எவ‌ரும் சுவ‌ர்க்க‌த்தில் எளிதில் நுழைந்து விட‌ முடியாது என‌ அல்லாஹ் அருதியிட்டு கூறும் பொழுது அதிரையில் பிற‌ந்த‌ நாம் எம்மாத்திர‌ம்? என்ன‌ நிலை ஏற்ப‌டும்? அதை நினைக்க‌யில் ப‌ய‌ங்க‌ர‌ம் எம் உள்ள‌த்தை சூழ்ந்து கொள்கிற‌து. அச்ச‌ம் உச்சி முத‌ல் உள்ள‌ங்கால் வ‌ரை ஆட்கொண்டு விடுகிற‌து நாம் அன்றாட‌ம் அல்லாஹ்விற்காக‌ செய்யும் சிறு,சிறு அம‌ல்க‌ளைத்தாண்டி..........

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சில‌ர் ஊரில் இருக்கிறார்க‌ள் வ‌ர‌த‌ட்சிணைக்கும் எங்க‌ளுக்கும் ரொம்ப‌ தூர‌ம் என்று ப‌ந்தா காட்டிக்கொண்டு த‌ன் வீட்டு ஆண் பிள்ளைக‌ளுக்கு ஒரே ஒரு பெண் பிள்ளையை பெற்ற‌ வீடுக‌ளாய்ப்பார்த்து திரும‌ண‌ம் பேசி முடித்து அந்த‌ பெண்ணுக்குத்தான் அந்த‌ வீட்டில் உள்ள‌ அனைத்து ந‌கை, வீடு, சொத்து, ப‌த்து எல்லாம் வ‌ந்து சேரும் என்ற‌ தொலைநோக்கு பார்வையில் ரொம்ப‌ க‌ச்சித‌மாக‌ பேசி முடிக்கிறார்க‌ள். இதுவும் ஒரு வ‌கையான‌ வ‌ர‌த‌ட்சிணையே. ஆனால் இப்ப‌டி ரொம்ப‌ த‌ந்திர‌மாக‌ முடிக்க‌ப்ப‌ட்ட‌ திரும‌ண‌ங்க‌ளின் ஆண் ம‌க‌ன் வீட்டில் ஐந்து, ஆறு ஆண் பிள்ளைக‌ள் இருந்தும் அல்லாஹ்வின் ச‌க்கினா என்னும் அமைதி இல்லை. ப‌ண‌த்திற்கு பிர‌ச்சினை. இன்னும் வீட்டிற்கு வ‌ந்த‌ ம‌ரும‌க‌ன் பிர‌ச்சினை என‌ இப்ப‌டி அடுக்கிக்கொண்டே போக‌லாம். அல்லாஹ்வை என்ன‌ இழிச்ச‌வாய‌ன் என்று எண்ணிக்கொண்டாயா? உன் வீட்டிற்குள்ளேயே எப்ப‌டியெல்லாம் உன்னை ஆட்டிப்ப‌டைத்து உன் வீட்டிற்குள்ளேயே உன்னை எப்ப‌டி சிறை வைக்க‌ முடியும் என‌ அவ‌னுக்கு ந‌ன்கு விள‌ங்கும் என்ப‌தை ம‌ற‌வாதே.......ஊர் சொத்திற்காக‌ க‌ள‌ம் இற‌ங்கும் இவ‌ர்க‌ள் த‌ன் வீடு சொத்தில் ஒரு அடி கூட‌ உட‌ன் பிற‌ந்த‌வ‌னுக்கு கூட‌ விட்டுக்கொடுக்காத‌ க‌போதிக‌ள் இவ‌ர்க‌ள்.....

அர‌ச‌ன் அன்றே கொல்வான்; அவ‌னைப்ப‌டைத்த‌ அல்லாஹ்வோ நின்றும் கொல்வான், நிற்காம‌லும் கொல்வான். அது அவ‌ன் விருப்ப‌ம்........

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பெண் வீட்டில் 3 ல‌ட்சங்களை வாட்டி வதக்கி வ‌ர‌த‌ட்சிணையாக‌ வாங்கி அதை அப்ப‌டியே கொண்டு போய் சென்னை அப்ப‌ல்லோவில் கொடுத்து இருத‌ய‌ அறுவை சிகிச்சை செய்து வ‌ந்த‌வ‌ர்க‌ளும் உண்டு. கேவ‌ல‌ம்....கேவ‌ல‌ம்...கேவ‌ல‌ம்....ந‌ம்மூர்கேவ‌ல‌ங்க‌ளை ப‌ட்டிய‌லிட‌ வெளியூர்க்கார‌ர்க‌ள் தான் முற்றிலும் அருக‌தையான‌வ‌ர்களும், தகுதியானவர்களும் ஆவர். ஆலிம்சாமாருவொலே பொண்டாட்டி ஊட்ல‌ த‌ங்கி இருக்கும் பொழுது எப்ப‌டீங்க‌ இந்த‌ விச‌ய‌த்தை ப‌ற்றி எவரும் ஆணித்த‌ர‌மாக ஊரில் பேச‌ முடியும்? எழுத‌ முடியும்?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அதுனால தான் நம்மூர்ல எப்பேர்ப்பட்ட பணக்காரவொளா இருந்தாலும் பொம்புளப்புள்ள அடுத்தடுத்து பொறந்துருச்சின்னா மூஞ்சி காத்து புடுங்க அட்ட(பலூன்) மாதிரி சுருங்கிப்போயிடுது....பெண் பிள்ளைகள் பிறந்தால் அவ்வீட்டில் பரக்கத் வந்து சேரும் என்று நம் மார்க்கம் சொல்கிறது...ஆனால் நம் ஊரில் எல்லாம் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. இதெற்கல்லாம் யார் காரணம்???

இன்னொரு அட்டூழியம் : கடைசி வரை வயதான வாப்பா,உம்மாவை வச்சி பார்ப்பாள் என அந்த வீட்டு பெண்ணுக்கு வீட்டினர் பல லட்சங்கள் மதிப்பிலான நகை, வீடு, சொத்து சுகங்களை கண்ணை மூடிக்கொண்டு எதையும் யோசிக்காமல் எழுதி கொடுக்கின்றனர். பின்னர் மாப்பிள்ளை திருமணத்திற்குப்பின் (இவ்வொ மார்க்கப்படி மனைவி மக்களோட ஒன்னா இருந்து வாழப்போறாகளாம்....) எல்லாம் எழுதி வாங்கி வைத்துக்கொண்ட பின் அந்த வீட்டின் ஒரே பெண்ணை கூட‌ அவ‌ர்க‌ள் ப‌ணி/வியாபார‌ம் செய்யும் இட‌ங்க‌ளுக்கும், வெளிநாடுக‌ளுக்கும் வீட்டில் அந்த‌ பெண்ணின் வ‌ய‌தான‌ வாப்பா, உம்மா எக்கேடு கெட்டு செத்தொழிந்தால் ந‌ம‌க்கென்ன‌? எப்ப‌டியாவ‌து அவ‌ர்க‌ள் சீக்கிர‌ம் போய்ச்சேர்ந்தால் ச‌ரி தான் என்றெண்ணி த‌ன்னுட‌ன் அழைத்துச்சென்று விடுகின்ற‌ன‌ர்.

இப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌ய‌வ‌ர்க‌ள் தானும் ஒரு ஆண்ம‌க‌ன் என்ற‌ திரானியும், துப்புவும் இருந்தால் அந்த‌ பெண் வீட்டினரிடமிருந்து அபகரித்த அனைத்து சொத்து,ப‌த்துக்க‌ளையும் அந்த‌ வ‌ய‌தான வாப்பா, உம்மாவிற்காக ஊரிலேயே விட்டு அப்பெண்ணை அழைத்துச்செல்ல‌ட்டும்.....திரும‌ண‌ம் முடித்து நீண்ட‌ கால‌ம் த‌னிமையில் வெளியில் இருந்தால் விப‌ச்சார‌ம் போன்ற‌ தீய‌ காரிய‌ங்க‌ளில் ஈடுப‌ட்டு விடுவோமோ என‌ அஞ்சும் ஆண்ம‌க்க‌ள் அதை விட‌ கொடுமையான‌ இந்த வகையான‌ வ‌ர‌த‌ட்சிணையிலிருந்து விடுப‌ட‌ அஞ்ச‌ வேண்டாமா? இது தான் ஊரில் ந‌ட‌ந்து வ‌ரும் ரீச‌ண்ட் வ‌ர‌த‌ட்சிணை கொடுமை......அநீதி இழைப்ப‌வ‌ர்க‌ள் எவ‌ராக‌ இருந்தாலும் அவ‌ர்க‌ளை அட‌க்கி ஒடுக்க, அழித்தொழிக்க‌ அந்த‌ அல்லாஹ்வே போதுமான‌வ‌ன்....யா ர‌ப்......

Unknown said...

////ஆலிம்சாமாருவொலே பொண்டாட்டி ஊட்ல‌ த‌ங்கி இருக்கும் பொழுது எப்ப‌டீங்க‌ இந்த‌ விச‌ய‌த்தை ப‌ற்றி எவரும் ஆணித்த‌ர‌மாக ஊரில் பேச‌ முடியும்? எழுத‌ முடியும்? //////
----------------------------------------------------------------
about 200 years questions?...no answer so far...

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

போடா!!! ஊடு, நகை, வரதட்சிணை கேக்குற மொஹரைய பாரு....ஒன்னும் தர மாட்டோம்....மார்க்கப்படி மஹர் கொடுத்து நபிவழியில் என்னை திருமணம் முடிக்க உனக்கு துப்பிருக்கா??? ஊடு,வாசலுக்காக ஆசைப்படும் நீ! திருமணத்திற்குப்பின் எனக்கு ஏதேனும் சம்பவித்து விட்டால் நீ எப்படி என்னை கடைசி வரை கூட இருந்து காப்பாற்றுவாய்??? என்னையே நான் உனக்கு அற்பணித்துத்தர தயாராக இருக்கும் பொழுது உனக்கு எதற்கு சொத்து,பத்து??? இவ்வளவு அல்லோலப்பட்டு என்னை உனக்கு திருமணம் முடிக்க எனக்கு அறவே இஸ்ட்டம் இல்லை.....நான் முதிர்கன்னியாக இருந்து இப்படியே மடிந்தாலும் மடிவேனே தவிர இது போன்ற போலி திருமணங்கள் எனக்கு ஒரு போதும் நடந்தேற வேண்டாம்...போங்கடா...போங்க...என்று ஒரு பெண் என்று துணிவுடன் தைரியமாக இது போல் கேட்டு வரும் ஆண் வர்க்கத்தை பார்த்தை செப்பையில் அரைந்தாற்போல் கேட்கிறாளோ அன்றிலிருந்து அவள் வாழ்க்கைக்கு அந்த அல்லாஹ்வே துணை நின்று கத்தருள்வான்......

Unknown said...

முனு நாள் தோழன் சாப்பாட விட்டுடீங்க!!

Unknown said...

ஆலிம்சாமாருவொலே பொண்டாட்டி ஊட்ல‌ த‌ங்கி இருக்கும் பொழுது எப்ப‌டீங்க‌ இந்த‌ விச‌ய‌த்தை ப‌ற்றி எவரும் ஆணித்த‌ர‌மாக ஊரில் பேச‌ முடியும்? எழுத‌ முடியும்? //////



நீங்கள் சொல்வது சரித்தான் குர்ஆன் சுன்னா வழியில் யார் இல்லையோ அந்த ஆலிம்சா மாரு அந்த நமக்கு எடுத்துக் காட்டு கிடையாது. குர்ஆன் சுன்னா வழியில் யார் செல்வார்களோ அந்த ஆலிம்கள் தான் நமக்கு எடுத்துக் காட்டு

Ebrahim Ansari said...

கொல்லைப்புற வரதட்சணை என்று கொடுமைகளை எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகிறேன்.

பணமாகக் கொடுப்பது மட்டுமோ நகையாகக் கொடுப்பது மட்டுமோதான் வரதட்சணை என்று பெரும்பாலோனோர் எண்ணிக் கொண்டு இருக்கிறோம்.
நம் ஊரைப் பொருத்தவரை வீடு கொடுப்பது என்று ஒரு முதலை இருக்கிறதே அந்த முதலையைப் பற்றி ஏன் நாம் எண்ணிப் பார்ப்பது இல்லை?

ஒரு குமரை கரைஏற்ற வேண்டுமானால் பதினைந்து முதல் இருபது இலட்சம் வரை விலை கொடுத்து மனைக்கட்டு வாங்கவேண்டும். அந்த மனையில் முப்பது இலட்சம்வரை செலவு செய்து வீடுகட்டிக் கொடுக்க வேண்டும். பழைய வீடாக இருந்தாலும் சரி அதை இடித்துவிட்டு புதியவீடாக கட்டித்தருகி றோம் என்ற வாய்மொழி உறுதியில்ல பத்திரத்தில் எழுதிக் கொடுக்கவேண்டும்.

வரதட்சணை வேண்டாமென்று மகர் கொடுத்து மணம் முடிப்பவர்கள் கூட வீடு மட்டும் வேண்டாமென்றே சொல்வதில்லை. எங்கள் வீட்டில் அல்லது மாப்பிள்ளை கட்டிய வீட்டில் பெண் வந்து வாழட்டும் என்று சொல்லும் தைரியம் உடையவர்கள் எத்தனை பேர்?

இதை எண்ணிப் பார்க்கும்போது இந்த முர்தபா, பசியாற, கோழிப்பெரட்டல் எல்லாம் ஜுஜுபி.



மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இ.அ. காக்கா இத விட கொடும என்னாண்டாக்கா ஒரே ஒரு இல்லாட்டி ரெண்டு ஆம்புளப்புள்ள மட்டும் வச்சிக்கிறவங்க கூட தன் புள்ளக்கி பொண்ணு ஊட்ல ஊடு வாணாம்ண்டு தைரியமா/துணிச்சலா நம்மூர்ல யாராலயும் சொல்ல முடியல காக்கா......அந்த காலத்துல ஏப்பசாப்பையா யாரோ பழக்கி உட்டது இப்ப உள்ள எல்லார்க்கும் ரத்தத்துல கலந்து ஒன்னுமே செய்ய முடியாம கைவுட்ட கேஸா ஆகிப்போச்சு போங்க........

Ebrahim Ansari said...

நமது ஊரில் உயர்ந்து நிற்கும் வீடுகளின் பின்னணியில் ஐந்து முதல் ஏழு வருடம் வரை லண்டனில் அமெரிக்காவில் வாழ்க்கையைத் தொலைத்த வடுக்கள் இருக்கின்றன. நினைத்தாலும் ஊருக்கு வரமுடியாத நிலைமைகள் இருக்கின்றன. பல இரவுகளின் ஏக்கப் பெருமூச்சுகள் இருக்கின்றன. உடன்பிறந்தவர்களுக்கும் பெற்ற பெண்மக்களுக்கும் ஆடம்பர வீடுகள் கட்ட அயல் நாட்டில் வாழ்க்கையைத்தொலைத்தவர்களின் வரலாறுகள் இருக்கின்றன.

இவ்வளவு பெரிய ஆடம்பர வீடுகளை இளமை சுகங்களைத் தொலைத்துவிட்டு கட்டுகிறார்களே இவை யாருக்காக? பொருளீட்டுவதில் முக்கால்வாசி கான்கிரீட் கட்டிடங்களாக நிற்கின்றன.

முதலில் பெண்களுக்கு வீடு கொடுப்பதை நிறுத்த வழி காணுங்கள்.

Ebrahim Ansari said...

தம்பி நெய்னா ! தொடர்ந்த கருத்துக்கு நன்றி.

பெண்களை இந்த வீடு கொடுக்கும் விஷயத்தில் நாம் பெரிதும் சம்பந்தப் படுத்துவதாக இருக்கிறோம். சிறந்த பயான்களை பெண்களுக்காகவும் செய்யும் ஒரு ஆலிம் அவர்கள்மீது அன்பு கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். இந்தப் பெண்களும் அப்படிப்பட்ட பயான்களை கேட்கிறார்கள். இவை எல்லாம் கேட்டு பின்பற்றி நடப்பதற்கா? தவறுகளை திருத்திக் கொள்ளவா அல்லது வெறுமனே கேட்டுவிட்டு அழகான பயான் என்று பாராட்ட மட்டும்தானா? திருந்தாவிட்டால் இந்த பயான்களின் பலன்தான் என்ன?

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

வரதடசனைக்கு எதிராக ஏனோதானோ என்று கருத்து கூறும் மார்க்க அறிஞர்கள் ஒருபுறம் என்றால்... மேடை போட்டு காட்டுக் கத்து கத்தும்.. தவ்ஹீது..!? வாதிகளில் சிலர்..ஒருபுறம்.. இப்ராஹீம் அன்சாரி காக்கா சொன்ன கருத்தில் நானும் உடன்படுகிறேன்.

ஒரு சில தவ்ஹீது வாதிகளும் பெண் வீட்டில் அத்துனையும் வாங்கிக் கொண்டு நானும் தவ்ஹீது வாதி என்று எப்படி வெடகமில்லாமல் பகிரங்கமாக அறிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை..?.

இவர்களுக்கு ஆலிம்களைப் பற்றி மேடைகளிலும் இன்னும் பிற பதிவுகளிலும் அவதூறு பேச என்ன அருகதை இருக்கிறது..?.

Unknown said...

Assalamu Alaikkum

An absolutely necessary awareness article.

Actually getting dowry for marrying a girl would reduce the prosperity.

Dowry is selfishness without compassion, not considering the girl's family's financial burden.

Generally people want free things without putting their honest work. Dowry is such a greedy mentality which puts girl's family under financial pressure.

May God Almighty help us to tackle this pathetic condition in our community.

Regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

abraarhussain said...

அருமையான பதிவு? நம்ம ஊரு வீட்டொட மாப்பிள்ளை பழக்கம் எப்ப ஓழியும்

Unknown said...

சகோ Jafar hassan ஆவேசப்பட வேண்டாம் பின்னூட்டம் எழுதும்போது நிதானமாக யோசித்து எழுதவும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இன்னொரு கொடுமை என்னவென்றால் எல்லாத்தையும் வரிந்து கட்டி வாங்கி கட்டிக்கொண்டு நல்லா மூணு வேளையும் மூக்குபுடிக்க பெண் வீட்டில் மூசுமூசுண்டு திண்டுபுட்டு பல ஆயிரெத்தெட்டு கஷ்டஙகளுக்குள் அப்பெண்ணையும் கற்பமாக்கி பத்து மாதங்கள் அப்பெண் வீட்டை கண்ணுக்குப்புழப்பட்டு அல்லது படாமல் படாதபாடுபடுத்தி பிறகு பெத்தெடுக்கும் தலைப்பிள்ளைக்கு பெண் வீடு தான் பிரசவ கால செலவனைத்தையும் ஏற்க வேண்டும் என்றுள்ள‌ எழுதப்படாத நம்மூர் சட்டத்தை இஸ்ரேல்காரவன் கேள்விப்பட்டால் கூட காரித்துப்பிவிடுவான்.......

Unknown said...

பின்னூடங்கள் எழுதும்பொழுது நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவும்.

ZAEISA said...

பெண் பிள்ளைக்கு வீடு கொடுப்பதில் ஒன்றும் தப்பில்லை என்று நினைக்கிறேன்.காரணம் அப்பொழுதுதான் பெண்ணை மணமுடித்தவன் தன் பிள்ளைக்கு வீடு கட்டவேனுமென்று உழைக்க முற்படுவான்.அப்படி வீடு பெற்ற யாரும் வீட்டை அதே நிலையில் வைத்திருக்காமல் மேலும் விஸ்தரிக்க முனைவான்,அல்லது அவன் சம்பாத்தியத்தில் புதிய வீடு கட்டிக்கொண்டு பெருந்தன்மையாக மனைவியின் தரப்பில் விட்டுவிடுவான்.அதனால்தான் நம் பெண்கள் மார்க்க நெறி பேணி கௌரவமாக வாழ்ந்து நமக்கும் கண்ணியத்தை சேர்க்கிறார்கள்.துணையை இழந்த முதியவர்களுக்கு கடைசிவரை பணி செய்ய மகளால் மட்டுமே முடியும்.
பெற்றோர்கள் தன் பிள்ளை நல்ல முறையில் வாழ வேண்டுமென்றுதான் நினைத்து மணமுடித்து வைப்பார்கள்.கதிரோடு பதரும் நெல்லாகத்தான் தெரியும். மணமுடித்த அனைவருமே வாழ்பவராக இருந்தால் சங்கத்தில் ஏன் மலைபோல் விவாகரத்து vazhakkukaL..?
நானும் நான்கு மகள்களை பெற்றவன்தான் அறியவும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஏற்கனவே நம் இஸ்லாம் சமுதாயம் எட்டு திசைகளிலிருந்து பல இன்னல்களையும், அல்லல்களையும், சொல்லிமாளா துயரங்களையும், துக்கங்களையும், வேதனைகளையும், சோதனைகளையும், அத்துமீறல்களையும், அநியாய அக்கிரமங்களையும் அனுபவித்து வருகிறது. இது பத்தாது என்று ஊரில் நம்மவர்கள் நம்மக்குள் திருமண காலங்களில் ஒருவருக்கொருவர் செய்யும் அட்டூழியங்களும், அநாச்சரங்களையும் அழித்தொழிக்கும் நாள் என்று தான் வருமோ இல்லை அதற்கு முன் நாம் சேர வேண்டிய இடம் சென்று தீருவோமா? அல்லாஹ் அஹ்ழம்....

இதை தத்தமது வாழ்வில் திருத்திக்கொள்வதில் யார் முந்திக்கொள்கிறார்களோ அவர்கள் நிச்சயம் இறை வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்வர்.

ஹிரோஷிமா, நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டு போல் என்றைக்கோ ஒரு நாள் யாரோ ஒருவர் செய்து விட்டு போன தவறுக்கு இன்றைக்கும் எம் மண் அநாவசியமாய் சொல்லாத்துயரை அடைந்து கொண்டிருக்கிறது பாகுபாடின்றி......

Unknown said...

சகோதரர்களே..நான் எந்த நேரத்திலும் ஆத்திரப் பட மாட்டேன்.. ஆதஙகப் படுவேன்..அதுதான் இந்தப் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்..பதிவின் சாரம்சமே கொஞ்சம் காரம்தானே அதனால் என் பின்னூட்டத்திலும் கொஞ்சம் காரம் சேர்ந்துவிட்டது.

பதிவின் ஆரம்பத்திலேயே இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் உள்ள பதிவல்ல என்று கூறியிருப்பதால் என் பின்னூட்டமும் யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல.

sabeer.abushahruk said...

கொடுக்கல் வாங்கல் மலிந்து போய்விட்டதால் கல்யாணச் சந்தை அதிரையில் கலைகட்டுகிறது.  இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவங்களை எண்ணிப்பார்த்தால் என் சமுதாயத்தை எண்ணி நெஞ்சு வலிக்கிறது.  உணர்வுகளைப் பகிர வேண்டிய குடும்ப வாழ்க்கை வியாபார யுக்திகளோடு நடத்தப்பட வேண்டும் என்னும் கட்டாயத்திற்குள் தள்ளப்படும்போது சுயநலம் கூடி குடும்ப வாழ்வு எந்திரத்தனமாகப் போய்விடும்.
 
இதன் பிரதிபலிப்புத்தான் “மாசப்பணம்”, “ராச்சாப்பாடு மட்டும் மாமியா வீடு”, “படுக்க மட்டும் வருவாக”, “அங்க கை நனைக்கக்கூடாது” போன்ற இல்வாழ்க்கைத் தொந்தரவாகிப்போன வார்த்தைப் பிரயோகங்களும் சம்பிரதாயமான வாழ்க்கையும்.
 
பெருசுகள் மனசு வைத்தால் உடனடி மாற்றம்; இல்லையேல் தொலை தூரத்தில்தான் வெளிச்சம்.

Shameed said...

இம்புட்டு நாளா ஒன்னு வெளங்காம இருந்துச்சு அது என்னென்னா கல்யாண ஊட்டுலே கொல்லைலே வஞ்சு ஏன் சோறு ஆக்குராங்கன்னு அது இப்போதான் வெளங்குது கொல்லைப்பக்கமா வர்ற பணத்த தல வாச பக்கம் எடுத்துகொண்டு வரமா கொல்லைலையோ வச்சு சோத்த ஆக்கிரக அட கொல்லைல போவியள என்பதன் உள் அர்த்தம் இதுதானோ

Meerashah Rafia said...

ZAEISA சொன்னது…
//பெண் பிள்ளைக்கு வீடு கொடுப்பதில் ஒன்றும் தப்பில்லை என்று நினைக்கிறேன்.காரணம் அப்பொழுதுதான் பெண்ணை மணமுடித்தவன் தன் பிள்ளைக்கு வீடு கட்டவேனுமென்று உழைக்க முற்படுவான்.//


பெண் பிள்ளை பெற்றால் மட்டும்தான் பொறுப்போடு சம்பாதிக்க அல்லாஹ் இரு கையை கொடுத்திருக்கின்றானா? ஆண் பிள்ளை பெற்ற தகப்பர்களுக்கும் அதே உழைக்கும் கையும், எண்ணமும்தானே கொடுக்கப்பட்டிருக்கின்றது? தெரியாமத்தான் கேட்கிறேன், நீங்கள் சொல்வதுபோல் பார்த்தால் ஆண் பிள்ளை பெற்ற அதிரை,காயல்பட்டினம்,கீழக்கரை வாசிகள் மட்டும் உடலளவில் ஊனமாகவா இருக்கின்றார்கள்? (மனதளவில் வேண்டுமானால் இருக்கலாம்)..

40 லட்சருபாய்க்கு வீடும், இன்னும் சில லட்சத்திற்கு நகையும் பெண்களுக்கு கொடுத்து ஆண் பிள்ளையை அம்போவென விடும் ஆண்,பெண் சொத்து பிரிப்பு வரையறை எந்த இசுலாமிய மார்கத்தில், மத்கபில் உண்டு?

இவ்விசயத்தில் அநேக மக்கள் நம்மை அறியாமல் தவறு செய்துவிட்டோம்..அல்லாஹ் பொருந்திக்கொள்ளட்டும். இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலம் எங்களைப்போன்ற இளைஞர்கள் வீடு வாங்குவதையும்,கொடுப்பதையும் தவிர்ப்போம்..இதற்கு இயக்கவாதியாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை..முஃமினாக இருந்தாலே போதும்.. பெரியவர்களின் துஆவும்,ஆதரவும் மிக முக்கியம்..

Anonymous said...

வரதட்சணை வாங்குபவர்கள் வாங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள் நாம் எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை. பெண் வீட்டாரிடம் கவுரமாக கைமாத்து தாங்க பிறகு தருகிறேன் மாப்பிள்ளை வீட்டார்கள் கூறுவார்கள். ஆனால் அது பெண் வீட்டாருக்கு அந்த பணம் திரும்ப செல்வதில்லை.

Unknown said...

எந்த திருமணத்தில் செலவு குறைவாக இருக்குமோ அந்த திருமணத்தில் தான் பரக்கத் இருப்பதாக ரஸீலுல்லாஹி (ஸல்) சொன்னார்கள்.



வீண் விரயத்தை பற்றி குர்ஆன் கூறும் வசனங்கள்:

17:27. நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

அப்துல்மாலிக் said...

ZAEISA சொன்னது…//துணையை இழந்த முதியவர்களுக்கு கடைசிவரை பணி செய்ய மகளால் மட்டுமே முடியும்.//அப்போ பிள்ளைகள் அனைத்தும் ஆண்களாக இருந்தால்...?

பெண்களுக்கு வீடு கொடுப்பதால்தான் நம்மூர்லே வரலாறு காணாத வகையில் மனைகள் விலையேறிப்போய் இருக்கிறது என்பது மறக்கம்முடியாத உண்மை. பெண்பிள்ளைகளுக்கு வீடு கொடுக்கவேண்டுமே என்று எவ்வளவு காசு ஆனாலும் வாங்க முற்பட்டு போட்டிக்களுக்கிடையே சாதாரண குடிமக்கள் வாங்கமுடியாத உச்சத்தில் உள்ளது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வரதட்சனை என்று சொல்லால் இல்லாமெ செயலில் ரகசிய உள்குத்து நல்லாதான் போய்க்கொண்டிருக்கு!

மாப்புளெ ஊடு புலால் உடுவதாக சொல்லி வெறும்2000 கொடுத்துவிட்டு 10- 15 ஆயிரம் வரை மீன் வாங்கி கலரி வைக்க உத்தரவு போடுவது எந்த வகை?

மாதம் மூவாயிரம் நாலாயிரம் கொடுத்துவிட்டு காலையிலெ ஈர ஆக்குனாஹலா, பகல்லெ காடெ பொறிச்சாஹலா, நைட்டுலே முற்தபா வச்சாஹலா என்று மாதம் 15 - 20 ஆயிரத்துக்கு வேட்டு வைக்கிற மாதிரி வினா தொடுப்பது எந்த வகை?

Saleem said...

சம்மந்தி வீட்டுக்கு வட்லப்பம் இல்லாமல் காலை பசியாற கொடுப்பதா என்று தூதுவர் சொல்ல, உடனே அதுவும்(மேல் செலவு) ரெடி!!

Unknown said...

//போடா!!! ஊடு, நகை, வரதட்சிணை கேக்குற மொஹரைய பாரு....ஒன்னும் தர மாட்டோம்....மார்க்கப்படி மஹர் கொடுத்து நபிவழியில் என்னை திருமணம் முடிக்க உனக்கு துப்பிருக்கா??? ஊடு,வாசலுக்காக ஆசைப்படும் நீ! திருமணத்திற்குப்பின் எனக்கு ஏதேனும் சம்பவித்து விட்டால் நீ எப்படி என்னை கடைசி வரை கூட இருந்து காப்பாற்றுவாய்??? என்னையே நான் உனக்கு அற்பணித்துத்தர தயாராக இருக்கும் பொழுது உனக்கு எதற்கு சொத்து,பத்து??? இவ்வளவு அல்லோலப்பட்டு என்னை உனக்கு திருமணம் முடிக்க எனக்கு அறவே இஸ்ட்டம் இல்லை.....நான் முதிர்கன்னியாக இருந்து இப்படியே மடிந்தாலும் மடிவேனே தவிர இது போன்ற போலி திருமணங்கள் எனக்கு ஒரு போதும் நடந்தேற வேண்டாம்...போங்கடா...போங்க...என்று ஒரு பெண் என்று துணிவுடன் தைரியமாக இது போல் கேட்டு வரும் ஆண் வர்க்கத்தை பார்த்தை செப்பையில் அரைந்தாற்போல் கேட்கிறாளோ அன்றி//லிருந்து அவள் வாழ்க்கைக்கு அந்த அல்லாஹ்வே துணை நின்று கத்தருள்வா//

இந்த வசனம் கிட்டத்தட்ட 100 வருஷங்களுக்கு முன்னாள் நம் உம்மாட உம்மா
அவ்வலுற உம்மா சொல்லியிருந்து வீரப்பென்மனியாய் வளம் வந்திருந்தால்
இப்படி இந்த பாழாப்போன பொண்ணுக்கு வூடு கொடுக்கும் கயமைத்தனம் வேரூன்றி வளர்ந்திருக்குமா ?

இப்பொழுது கூச்சல் போட்டு பலன் இல்லையென்று சொல்ல முடியாது, பலன் கிடைக்கும், எப்பொழுது தெரியுமா ? இன்னும் ஐம்பது அல்லது நூறு வருடங்கள்கூட செல்லலாம். ஏனனில், அவ்வளவு வேரூன்றி கால் பதித்து இருக்கின்றது இந்த பாழாப்போன பழக்கம்.

என்று கலைந்தெடுக்கப்படும் இந்தப்பழக்கம்
அல்லா ஒருவனுக்கே வெளிச்சம்.

அபு ஆசிப்.

ZAEISA said...

ஆண் தூக்கணாங்குருவி படாதபாடு பட்டு வீட்டைக்கட்டிவிட்டு பின் பெண் குருவியை பார்வைக்கு விடுமாம் அந்த பெண்ணிற்கு பிடித்தால் மட்டுமே அதனுடன் சேர்ந்து வாழ முற்படுமாம்...நம்மில் எத்தனை ஆண் தூக்கனாங்குருவி உண்டு...?
அதிரை,கீழக்கரை,காயல்பட்டினம் என்று குறிப்பிட்டு பேசக் காரணம் பெண்ணிற்கு வீடு கொடுப்பதாலேயே.......மேலும் ஒரு ஆண் உழைத்து முன்னேற வேண்டுமென்று உந்துதலுக்கு தள்ளப்படுகிறான் தன் கணவன் சம்பாத்தியத்தில்தான் தான் வாழ வேண்டுமென எந்த பெண்ணும் நினைப்பாள்
பெண்பிள்ளை பெறாத முதிய பெற்றோர் எத்தனை துன்பத்தில் உழன்று மரித்துப்போனதை ,அப்துல் மாலிக் போன்றவர்கள் நேர்லயே பார்த்திருக்க கூடும்.
அதுசரி பெண்னை மணந்தவன் எல்லோருமே வாழவைத்து விடுகிறார்களா,,? பெண்ணிற்கு வீடு வேண்டாமென்று இங்கு வாதிடுவோரில் ஒரு தூகணாங்க்குருவி உண்டா............?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ZAEISA சொன்னது… அதுசரி பெண்னை மணந்தவன் எல்லோருமே வாழவைத்து விடுகிறார்களா,,? பெண்ணிற்கு வீடு வேண்டாமென்று இங்கு வாதிடுவோரில் ஒரு தூகணாங்க்குருவி உண்டா............?//

அஸ்ஸலாமு அலைக்கும்,

நீங்கள் கேட்கும் கேள்வி முழுக்க முழுக்க உண்மை. எத்தனை ஆண் எனக்கு வரும் பெண் என் வீட்டில் தான் வாழவேண்டும் என்று தன் பொற்றோரிடம் போராடுகிறார்கள் என்பது கேள்விகுறியாக இருந்தாலும், அந்த ஆண் பிள்ளையை பெற்ற தாயோ தகப்பனோ தன்னுடைய மருமகளை தன் வீட்டில் வைத்து வாழவைக்க வேண்டும் என்று எண்ணுவதும் ஒரு கேள்வி குறியாக இருந்தாலும், எத்தனை பெண்ணைப் பெற்றவர்கள் தன்னுடைய மகள் மாமியார்விட்டில் வாழ விருப்படுகிறார்கள்? எத்தனை அதிரை மணமகள்கள் தன் கணவனின் இல்லத்தில் வாழ விரும்புகிறார்கள்? எத்தனை பெண்கள் தன்னுடைய கணவனின் கஷ்டத்திலும் துன்பத்திலும் பங்குபோட விரும்புகிறார்கள்? இருப்பினும் விதிவிலக்காக ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நீங்கள் குறிப்பிடும் தூக்கணாங்குருவியாக இருக்கும் ஒரு சிலர் தங்களின் வசதிக்கெற்ப வாழ நினைத்தால், அவனின் கரம் பிடித்தவள் அவனுடைய வசதிற்கேற்ப அவன் தாய் வீட்டில் வாழ விரும்புவதில்லை என்பதும் நடக்கத்தான் செய்கிறது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இதிலும் விதிவிலக்காக ஒரு சிலர் இருக்கிறார்கள்.

கல்யாணத்தில் நீ மாலை (இஸலாத்தில் இல்லாத பழக்கம்) போட வேண்டும், நீ போடவில்லை என்றால் அது நமக்கு அவமானம்,அப்படி போடவில்லை என்றா நீ என் மகனல்ல என்று சொல்லும் பல பெற்றோர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போலத்தான் தட்சனை, சீராட்டு, வீடு இதெல்லாம் வாங்காவிட்டால் அவமானம் கேவலம் என்று எண்ணும் போற்றோர்கள் இருக்கும் போது மணமகனை மட்டும் குற்றம் காணுவது எப்படி சரியாகும். எல்லாம் கூட்டனியின் குற்றம்.

இங்கு நாம் கருத்துரையாடுவது ஓர் சமூக பிரச்சினை பற்றி. பெண்கள் தான் பெண்களுக்கு வில்லிகளாக உள்ளார்கள் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. கோள் மூட்டி விடும் சைத்தான்கள் நம்மூரில் அதிகம் என்பதை நினைவில் கொள்வோம்.

அல்லாஹ்வின் அச்சம் முழுமையாக ஒவ்வொருவரிடம் வந்தால் மட்டுமே நம்மூர் சமூகத்தில் பெண்ணுக்கு வீடு, வரதட்சனை, சீர் சிராட்டு, மாமியார் வீட்டு வட்லப்பம் கடப்பாசி எல்லாம் ஒழிந்துப்போகும்.

எனக்கு வரதட்சனை சீர் சிராட்டு வேண்டாம் என்று சொல்லும் மணமகன் எனக்கு வரும் மனைவிக்கு வீடு வேண்டாம் என்று சொல்லுவதை நாம் வழியுறுத்துவது போல். தனக்கு வரப்போகுகிறவன் வரதட்சனையோ, சீர் சிராட்டோ, வீடோ கேட்டால் அவன் எனக்கு தேவையில்லை என்ற நிலைய மணமகள் எடுக்க வேண்டும் என்பதையும் வழியுறுத்த வேண்டும்.

நமதூரில் நெசவுத்தெருவில் பெண்கள் திருமணத்திற்கு பிறகு தன் மாமியார் வீட்டில் தான் வாழுகிறார்கள் என்பது சாத்தியமாக இருக்கும் போது ஏன் அதிரையில் உள்ள பிற தெருக்களில் சாத்தியமில்லை?

இது தான் நம்ம குடும்ப சம்பிரதாயம் ஊர் வழக்கம் என்று ஒவ்வொரு தவறுக்கு excuse வாங்கிக்கொண்டே தூய இஸ்லாத்தை வாயலவில் பேசி செயலவில் விட்டது தான் மிச்சம். நம் சமூதாயத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக..

சபீர் காக்க சொல்லியது போல்.. பெருசுகள் மனசு வைத்தால் உடனடி மாற்றம்; இல்லையேல் தொலை தூரத்தில்தான் வெளிச்சம்.

Meerashah Rafia said...

Bro.ZAEISA சொன்னது…
//ஒரு ஆண் உழைத்து முன்னேற வேண்டுமென்று உந்துதலுக்கு தள்ளப்படுகிறான் தன் கணவன் சம்பாத்தியத்தில்தான் தான் வாழ வேண்டுமென எந்த பெண்ணும் நினைப்பாள்//


ரொம்ப நன்றி.. விளக்கமளிப்பதை எளிதாக்கியதற்கு..
உங்கள்கூற்றுப்படி பார்த்தால் ஒரு மனைவிக்கு தன் கணவன் சம்பாதித்து வீடு கட்டிக்கொடுத்தால்தானே சந்தோசம்நமதூரில் அப்படியா நடக்கின்றது? மாறாக கணவன் தன் மனைவிக்கா வீடு கட்டிக்கொடுப்பதிற்குபதில் தன் பெண் பிள்ளைக்கல்லவா கொடுக்கின்றார்? அதில் வசிப்பதோ மருமகன் என்ற பெயரில் வருபவர்தானே?

எது எப்படியோ உண்மையில் விருப்பப்பட்டு கொடுத்தால் ஒரு பெண்ணிற்கு 5 வீடு கூட பெண்ணின் தகப்பனார் கொடுக்கலாம்..மாப்பிளையையும் வீட்டோடு வைத்துக்கொள்ளலாம்.. வீடு கேட்டு கட்டாயபடுத்துவதே வரதட்சணையோடு சேரும்..

தூக்கணாங்குருவி தன் மனைவியை விட்டு பார்க்காமல், தன் மகளை விட்டு வீட்டை பார்த்து வர சொல்லட்டும் பின்பு நமதூரில் தூக்கணாங்குருவி இருக்காவென்று பார்போம்..

Canada. Maan. A. Shaikh said...

வரதச்சனை விஷயத்தில் பெண்கள் (தாய்மார்கள்) தான் பெரிதும் சம்பந்தப் படுத்துவதாக அறிகிறோம். நம் ஊரில் சிறந்த பயான்களை பெண்களுக்காக செய்யும் ஒரு ஆலிம் அவர்கள்மீது அன்பு கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். இந்தப் பெண்களும் அப்படிப்பட்ட பயான்களை கேட்கிறார்கள். இவை எல்லாம் கேட்டு பின்பற்றி நடப்பதற்கா? தவறுகளை திருத்திக் கொள்ளவா அல்லது வெறுமனே கேட்டுவிட்டு அழகான பயான் என்று பாராட்ட மட்டும்தானா? எனவே இந்த பயான்களின் பலன்கள் இன்ஷா அல்லாஹ் நம் பெண்களிடம் இருந்து விரைவில் எதிர் ஒழிக்க நாம் துவா செய்வோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n): இந்த தட்சனைகளிருக்குமிடங்களில் இருக்க மாட்டேன்னு தெரியும்தானே ? ஆனாலும் இருப்பேன் காரணத்துடன் ! :)

நியாயமான ஆதங்கங்கள், கோபங்கள், அனைத்தும் பாதிக்கப்பட்ட நிலையிலும் அதனைக் கண்கூடாக கண்டச் சூழலிலும் கருத்துக்கள் வெடிக்கின்றன !

எல்லோருக்கும் சிந்தனையோட்டம் ஒன்றாகத்தான் இருக்கிறது ! அடிக்கும் அலைகள் ஒதுங்கும் கரையும், அருகே இருப்பவர்களின் சூழ்நிலைகளைப் பொருத்தே அமைகிறது !

கொல்லைப்புற தட்சணைகள் பலவகைகள் இருப்பினும் பரவலாக இருப்பதையே இங்கே சுட்டலுடனும் காட்டாக வைக்கப்பட்டிருக்கிறது !

வீடு ! நாமும் கட்டுவோம்... ! அடுத்த பதிவாக !

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

அருமையா ஆக்கம்.
ஊரு ஒன்று பட்டால் கூட பெண் வீட்டாரின் கண்ணீரை துடைக்க முடியாது. இது காலத்தோடு கலந்துவிட்ட ரணம்.

பெண்கள் முன்னேற்றம், பெண்கள் அமைப்பு, பெண்கள் பாதுகாப்பு கழகம் இன்னும் அனேக நிறுவனங்கள் பெண்களுக்காக ஒத்துழைத்துக் கொண்டு இருந்தாலும் திருமணம் என்ற வட்டத்துக்குள் பெண் மாப்பிள்ளை வீட்டாரால் எப்படி நடத்தப்படுகிறாள் என்று சிந்தித்து பாருங்கள்.

டிவியில் கிரேப்வாட்டர் குறித்து ஒரு விளம்பரம் வரும் " நீ குழந்தையாக இருக்கும்போது இதைத்தான் கொடுத்தேன்" என்று. அது போலே இந்த சீர் சீராட்டுக்களும் வாழையடி வாழையாக தொடர்ந்து கொண்டு இருக்குது, பகிரங்கமாக நடந்தது இப்போ திருட்டுத் தனமாக நடக்குது.

சுருக்கமாக சொன்னால் பிச்சை காரர்கள் கூட கொல்லைப் புறமாக வரமாட்டார்கள்.

இப்படிக்கு.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

ZAEISA said...

வீடு உங்களுக்கு என்று சொல்லியும் எதுவும் வேண்டாம் என்மஹருக்கு பெண் தந்தால் போதுமென்று பெண் வீட்டிற்கு செலவு வைக்காமல் மணமுடித்து இஸ்லாத்திலிருந்து மாறுபடாது வாழும் சரியான ஆண்மகனும் உண்டு. அதேபோல்,நான் மாலையெல்லாம் போடாமல்தான் திருமணம் செய்வேன் என்று சொல்லி செய்து இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாகியும் வீடுதான் வேண்டுமென கெடுபிடி செய்தவரை வேண்டாமென பிரிந்த மனைவிகளும் உண்டு. // தூக்கணாங்குருவி தன் மனைவியை விட்டு பார்க்காமல், தன் மகளை விட்டு வீட்டை பார்த்து வர சொல்லட்டும் பின்பு நமதூரில் தூக்கணாங்குருவி இருக்காவென்று பார்போம்.. //சகோ மீராசாஹிப் ராபியா .....நீங்கள் நான் குறிப்பிட்டதை திரும்ப படியுங்கள் தனக்கு வருகின்ற மனைவிக்குதான் கூட்டை காண்பிக்குமே தவிர மாமியாளை கூட்டி வராது ....
மேலும்,நாலு ,ஐந்து மகன்களுக்கு மனைவிமார்கள் இருந்தும் பதயத்துபட்டு இறந்த அப்பாவி முதியோர்கள் நிறையவும் உண்டு.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஆக மொத்தம் நம்ம வாழ்க்கை முழுவதும் இந்த சனியனால் அமைதியின்றி கலவரப்பட்டு கச்சாமுச்சாண்டு ஆகி விட்டது நம்மூரில். ச்சே போலியான மதங்களிலுள்ள இறைநிராகரிப்போர் கூட இந்த விசயத்தில் முற்றிலும் உண்மையான மார்க்கமான இஸ்லாமிய கோட்பாடுகளை எவ்வித கலங்கமின்றி,கலக்கமின்றி தெளிவாக கடை பிடித்து ஏழையாக இருந்தாலும் இவ்வுலகில் எவ்வளவு சந்தோசமாக இருந்து வருகிறார்கள் என சத்தியமார்க்கத்திற்குள் இருந்து கொண்டு அவர்களை ஏக்கப்பெருமூச்சுடனேயே பார்க்க வேண்டியுள்ளது........

அந்தக்காலத்து நம்மூர் மக்களுக்கு ஒஸ்த்தாருமாருவொ ஒழுங்கா ஓதிக்கொடுக்காமல் போனது எவ்வளவு சல்லையா ஈக்கிது இன்னெக்கி...(நெசவுத்தெரு ஒஸ்த்தாரு மட்டும் நல்லஒளா ஈந்தீப்பாஹளோ?????)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

// மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

ச்சே போலியான மதங்களிலுள்ள இறைநிராகரிப்போர் கூட இந்த விசயத்தில் முற்றிலும் உண்மையான மார்க்கமான இஸ்லாமிய கோட்பாடுகளை எவ்வித கலங்கமின்றி,கலக்கமின்றி தெளிவாக கடை பிடித்து ஏழையாக இருந்தாலும் இவ்வுலகில் எவ்வளவு சந்தோசமாக இருந்து வருகிறார்கள் என சத்தியமார்க்கத்திற்குள் இருந்து கொண்டு அவர்களை ஏக்கப்பெருமூச்சுடனேயே பார்க்க வேண்டியுள்ளது........//

அஸ்ஸலாமு அலைக்கும்,

மிகச் சரியாக சொன்னீர்கள்.

அப்துல்மாலிக் said...

//மேலும்,நாலு ,ஐந்து மகன்களுக்கு மனைவிமார்கள் இருந்தும் பதயத்துபட்டு இறந்த அப்பாவி முதியோர்கள் நிறையவும் உண்டு.// இப்படி ஏன் நடக்குது என்பதை யோசித்தீர்களா சகோ...! அந்த மகனுடைய மனைவி மாமியார் வீட்டில் வாழ்ந்தால் அந்த வயோதிக அம்மா ஏன் பதயத்துப்பட்டு இறக்கிறாங்க. ஒட்டுமொத்த மகன்களும் மனைவி வீட்டுக்கே போய்விட்டால் இப்படிதான் நடக்கும்.

// தன் கணவன் சம்பாத்தியத்தில்தான் தான் வாழ வேண்டுமென எந்த பெண்ணும் நினைப்பாள்// இதுதான் உண்மையான மனைவிக்கு அடையாளம். தந்தையோ/அண்ணனோ கட்டித்தந்த வீட்டில் வாழவிரும்பமாட்டால். இந்த நிலை இருந்தால் ஒவ்வொரு ஆணும் தனக்கென்று ஒரு வீடு கட்டிக்கொள்ளும் அளவுக்கு சம்பாதித்து பிறகு தன் குடும்பத்துக்கும் பிள்ளைகளுக்கும் உழைப்பான். ஆனால் நம்மூரில் அப்படியா இருக்கு. மூத்தவனாக இருந்து 2-3 தங்கைகள் இருந்துவிட்டால் அப்புறம் எங்கே தனக்கு வீடு அப்புறம் தன் குடும்பத்தை காப்பாத்துறது? வீட்டுக்கு மருமகனா போகுறவன் கொஞ்சமேனும் இந்த வீடு எப்படி கட்டப்பட்டது என்று கொஞ்சமேனு யோசித்து இருந்தால் மனைவியை தன்வீட்டோடு கூட்டிவந்துடுவார்...

அப்துல்மாலிக் said...

//அந்தக்காலத்து நம்மூர் மக்களுக்கு ஒஸ்த்தாருமாருவொ ஒழுங்கா ஓதிக்கொடுக்காமல் போனது எவ்வளவு சல்லையா ஈக்கிது இன்னெக்கி...(நெசவுத்தெரு ஒஸ்த்தாரு மட்டும் நல்லஒளா ஈந்தீப்பாஹளோ?????)/./

நெய்னா இதுலே ஒஸ்தாதை குறைசொல்ல முடியாது. ஒஸ்தாத் குரான் மட்டுமே ஓதித்தருவாங்க... முன்னோர்கள் வாழையடி வாழையா செஞ்சதை ஏன் எதுக்கு என்று கொஞ்சமேனும் யோசிக்காமல் செய்தது.. அல்லாஹ்வின் உதவியால் இந்த தலைமுறை கொஞ்சமேனும் வருந்துறாங்க, அது தப்புனு பேசுறாங்க இதுவே ஒரு முன்னேற்றம்தான். இன்ஷா அல்லாஹ் வரும் தலைமுறை இந்த முறையிலிருந்து முற்றிலும் விடுபடும் என்று நம்புவோம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வரதட்சணை வாங்காமல் கல்யாணம் முடிச்சாலும் நளபின்னே பொண்டாட்டி புருஷன்சான் சண்டை வந்தா பொண்டாட்டி என்ன சொல்றா தெர்யுமா "பொண்ணு கொடுத்தா போதும் "முண்டு எங்க வாப்பா காலுலே உளுந்து பொண்ணு கேட்ட பயதானேடா நீ.ஒனக்கு யவடா பொண்ணு கொடுக்க வாசக் கதவை தொறந்து கிட்டு நிண்டா''ன்னு வசை பாடுறா.

இதுக்கு பதிலை எடுத்து போடுங்க பாக்கலாம்.

S.முஹமது பாரூக்.அதிரைக்காரன்

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமுஅலைக்கும் எம்.எஸ்.எம்.!!!
அழ்ந்த அறிவார்ந்த சிந்தனைகள். உங்களின் வொவ்வொரு பின்னூட்டமும்
நெஞ்சில் ஈட்டி கொண்டு பாய்ச்சிவிட்டது. நாம் எங்கே இருக்கிறோம், நம் நிலை என்ன என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகிறது.
அடிப்படையில் நம் பெண்களுக்கு மார்க்கக் கல்வியைப் போதிக்கவேண்டும். அவர்கள் தான் நமது சந்ததியினரை நெறிப்படுத்த முடியும். ஒரு ஆண் நேர்வழி பெற்றால் அவன் மட்டுமே பயன் அடைவான். ஆனால் ஒரு பெண் நேர்வழி பெற்றால் ஒரு தலைமுறையே பயன் அடையும்.
ஜஸாக்கல்லாஹு ஹைரன்.
வஸ்ஸலாம்
N.A.Shahul Hameed

Canada. Maan. A. Shaikh said...

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், பெண் மக்களுக்கு வீடு கொடுக்கும் பழக்கம் இல்லையேல் ஊரும் முன்னேரிக்காது ஆறு குளம் குட்டை என கொஞ்சமாது மிஞ்சி இருக்கும் என்ன சரி தானே.........

Unknown said...

இதுகுறித்து பலமுறை பலவாறு விவாதிக்கப் பட்டுவிட்டாலும் முடிவை எட்ட இயலவில்லை என்பது வேதனை

நான் நினைக்கும் ஆதங்கங்களை பின்னூட்டமாக இட நினைத்தாலும் அது இங்கே மட்டுறுத்தப் படலாம் என்பதால் என் சொந்த ப்ளாக்கரில் என் ஆதங்கங்களை வெளிப் படுத்தியுள்ளேன்.

http://ungalsakotharan.blogspot.com/2013/05/blog-post_27.html

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

வ'அலைக்குமுஸ்ஸலாம் சார். என்ன சார் செய்யிறது? நாம் இது பற்றி காரசாரமாக இங்கு பேசுவதும், அடிக்கடி விவாதிப்பதும், எழுதுவதும் ஏதோ இமயமலை அடிவாரத்தில் இருந்து கொண்டு பனிமூடிய அந்த எவரஸ்ட் சிகரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் ஒரு பனிக்கழுகிற்கு கல்லெறிவது போல் தான் இருக்கிறது நம்மூர் நிலைமை. சமீபத்திய மத்திய கிழக்கு நாடுகளின் பெரும் புரச்சியால் பல வருடங்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த சர்வாதிகார அதிபர்கள் கூட தெருநாய் போல் இறுதியில் அடித்துக்கொல்லப்பட்டனர். ஆனால் நம்மூருக்கு இந்த தனிப்பட்ட விசயத்தில் என்று தான் ஒரு பெரும் புரட்சி வெடித்து பாழாய்ப்போன தொண்டுதொற்று வந்த ஊர்ப்பழக்கவழக்கங்கள் மண்ணுக்குள் குழி தோண்டி புதைக்கப்படுமோ???

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இப்படி காரசாரமாக எழுதுவதால் "இந்த சொம்பு ரொம்ப அடி வாங்கி இருக்குமோ"? என எண்ணத்தோன்றும். அதிரையில் உருவான (பிறந்த) ஒவ்வொரு சொம்பும் ஏதாவது ஒரு வகையில் இவ்விசயத்தில் நிச்சயம் அடி வாங்கியே இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம்..........

அப்துல்மாலிக் said...

// ஒரு ஆண் நேர்வழி பெற்றால் அவன் மட்டுமே பயன் அடைவான். ஆனால் ஒரு பெண் நேர்வழி பெற்றால் ஒரு தலைமுறையே பயன் அடையும்.//

சார் இந்த ஒரு வரி நச்..
இப்போ ஊருலே பெண்கள் படிக்கிறாங்க ஆனாலும் அதனால் மட்டுமே நெறிமுறைகளை பெற்றோர்களோ அல்லது கல்யாணம் செய்துக்கொள்ளப்போகும் மணமகனோதான் ஏற்படுத்த முடியும. கல்வி கற்ற ஒரு பெண் எனக்கு வீடு வேண்டாம் மாமியார் வீட்டில்தான் வாழ்வேன் என்று சொன்னாலும் நடைமுறை கலாச்சாரத்துலே உள்ள சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகமே. எனவே மாற்றம் முதன் முதலில் மணமகனிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும்...

Unknown said...

சத்தியத்தை எடுத்து சொல்லும் ஆலிம்சாக்கு ஊரில் உள்ள சங்கம் வாய்க்கு முத்திரை போட்டு விடுகின்றார்களே.இதற்கு கண்டிப்பாக முடிவு கட்ட வேண்டும் இனசா அல்லாஹ்

Ebrahim Ansari said...

அப்துல் மாலிக் அவர்கள் சரியாகச் சொல்லி இருக்கிறார்கள்.

பெண்கள் தாய்வீட்டை விட்டு மாமியார் வீட்டில் போய் வாழ சம்மதிப்பதை கொண்டுவருவது குதிரைக் கொம்புதான்.

நமதூரில் மருமகள்கள் மாமியார் வீட்டுக்கு மாதம் ஒருமுறை போய்வரும் விருந்தாளிகளே. மாமியார் வீட்டுக்கு மாலை வேளைகளில் புதுத்துப்பட்டி போட்டுப் போகும் மருமகளுக்கு மாமியார் அல்லது நாத்தனார் தான் பாய் விரித்து மேரி பிஸ்கட் வைத்து டீ போட்டுக் கொடுக்க வேண்டும். அதே போல் பெருநாள் மாலைகளில் மாமியாரைப் போய் பார்த்துவரவேண்டும்.

மற்ற ஊர்களில் அப்படியல்ல. மருமகள், மாமியார் வீட்டுக்கு அடுப்பங்கரைவரைக்கும் அதிபதியாகிறாள். வீட்டில் பிறந்து வளர்ந்த மகள்தான் விருந்தாளியாகிறாள்.

மதுக்கூர், முத்துப்பேட்டை, மல்லிபட்டினம் , துளசியா பட்டினம், கட்டிமேடு முதலிய நமதூரை சுற்றியுள்ள முஸ்லிம் செக்மென்ட் களில் இதுதான் பழக்கம்.

Shameed said...

பொதுவா ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும் அடும்பங்க்கரையில் காஸ் சிலிண்டர் வெடிப்பதேல்லாம் மருமகல்களுக்கே தவிர மகளுக்கு அல்ல

Shameed said...

Canada. Maan. A. Shaikh சொன்னது…
//ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், பெண் மக்களுக்கு வீடு கொடுக்கும் பழக்கம் இல்லையேல் ஊரும் முன்னேரிக்காது ஆறு குளம் குட்டை என கொஞ்சமாது மிஞ்சி இருக்கும் என்ன சரி தானே.........//



ஆமா நம்ம ஆளுக கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தை எல்லாம் ஆறு குளம் குட்டைலே தான் போட்டு வச்சிகிறாங்க!! இன்னும் ஒன்னு தான் பாக்கி இருக்கு அதான் கடலு அங்கே மட்டும் தான் இன்னும் போடலே

ZAEISA said...

பெண்ணுக்கு வீடு தேவையில்லை என்று சொல்லும் அன்பு சகோதர்கள் ஒரு நல்ல திருப்பம் நம்மை கொண்டு தொடங்கட்டும் என்று எண்ணி தன் மகன் பெயரில் வீட்டை எழுதிக் காட்டுங்கள் பின்பு மற்றவர்களுக்கு சொல்லுங்கள்

Ebrahim Ansari said...

சகோதரர் ZEISA அவர்களின் சவாலை ஏற்போர் யார்?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், இ அ காக்கா,

//நமதூரில் மருமகள்கள் மாமியார் வீட்டுக்கு மாதம் ஒருமுறை போய்வரும் விருந்தாளிகளே. மாமியார் வீட்டுக்கு மாலை வேளைகளில் புதுத்துப்பட்டி போட்டுப் போகும் மருமகளுக்கு மாமியார் அல்லது நாத்தனார் தான் பாய் விரித்து மேரி பிஸ்கட் வைத்து டீ போட்டுக் கொடுக்க வேண்டும். அதே போல் பெருநாள் மாலைகளில் மாமியாரைப் போய் பார்த்துவரவேண்டும். //

நீங்கள் சொல்லுவது 100க்கு 100 கவலையான உண்மை உண்மை.

Yasir said...

பிச்சளங்கள் அதிகமாக இருந்தால் “பிச்சை” எடுத்து சாப்பிட வேண்டியதுதானே...ஏன் பெண்வீட்டில் கையேந்த வேண்டும்..நல்ல உரப்பான ஆக்கம்...உங்கள் தைரியம் தெனாவட்டை வாழ்த்துக்கின்றேன் அ.நி

அப்துல்மாலிக் said...

//ZAEISA சொன்னது…
பெண்ணுக்கு வீடு தேவையில்லை என்று சொல்லும் அன்பு சகோதர்கள் ஒரு நல்ல திருப்பம் நம்மை கொண்டு தொடங்கட்டும் என்று எண்ணி தன் மகன் பெயரில் வீட்டை எழுதிக் காட்டுங்கள் பின்பு மற்றவர்களுக்கு சொல்லுங்க//

என் வாப்பா/உம்மா வீட்டில்தான் நானும் என் மனைவியும் இருக்கிறோம் இருப்போம் என்பதை பகிரங்கமாக இங்கே அறிவிக்கிறேன். எனக்கு என்று வீடு கட்டிக்கொண்டு இருக்கேன் அதை என் மகனுக்குதான் கொடுப்பேனே தவிர மகளுக்கு அல்ல..... அல்லாஹ் போதுமானவன்.. வேறு யாரெல்லாம் இந்த எண்ணத்தில் இருக்காங்களோ அவர்களின் கனவை அல்லாஹ் நிறைவேற்றித்தருவானாகவும்-ஆமீன்

Meerashah Rafia said...

Bro.abdul Malik said,
\\என் வாப்பா/உம்மா வீட்டில்தான் நானும் என் மனைவியும் இருக்கிறோம் இருப்போம் என்பதை பகிரங்கமாக இங்கே அறிவிக்கிறேன். எனக்கு என்று வீடு கட்டிக்கொண்டு இருக்கேன் அதை என் மகனுக்குதான் கொடுப்பேனே தவிர மகளுக்கு அல்ல..... அல்லாஹ் போதுமானவன்.. வேறு யாரெல்லாம் இந்த எண்ணத்தில் இருக்காங்களோ அவர்களின் கனவை அல்லாஹ் நிறைவேற்றித்தருவானாகவும்-ஆமீன்\\

ஆமீன். நானும் இதை கடைப்பிடிக்க முயற்சித்து வருகின்றேன்,பல போராட்டங்களுக்கு இடையில்.

Ebrahim Ansari said...

தம்பி அப்துல் மாலிக்! உங்களைப் பாராட்டுவோம். நெசவுத்தெரு சகோதரர்கள் ஏற்கனவே பாராட்டப்பட்டுவிட்டார்கள்.

தம்பி மீராசா ! நல்ல குறிக்கோள். அல்லாஹ் உங்களின் நோக்கத்துக்கு துணை இருப்பானாக்! ஆமீன்.

ZAEISA said...

நான் விடுத்த வேண்டுகோளுடன் நெசவுதெரு சகோதரர்கள் ஒப்பல்ல........என்று
எழுத மறந்துட்டேங்க........

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...


நிஜத்தில் வந்து நம் வாழ்வில் நல்லாட்சி புரிய வேண்டிய எத்தனையோ நம் நல்லெண்ணங்கள் கனவில் வந்தாவது எம்மை காசின்றி ஆசுவாசப்படுத்தி விட்டு போகட்டுமே???

என்ன‌ தான் அழ‌கிலும், மார்க்க,துனியா அறிவிலும், ஆற்ற‌லிலும், குடும்ப‌ பாங்கிலும், கெட்டித்த‌ன‌த்திலும், அர‌வ‌ணைப்பிலும், அன்பிலும், அட‌க்க‌த்திலும், ந‌ல்லிண‌மாக‌ பேசுவ‌திலும், ந‌ன்ன‌ட‌த்தையிலும் சிற‌ந்து விளங்கி த‌னித்த‌ன்மையுட‌னும் இருந்து வரும் அதிரையில் பிற‌ந்த‌ பெண் வ‌ர்க்க‌த்திற்கு திரும‌ண‌ம் முடிக்க அவ்வீட்டார் எதையாவ‌து நிச்ச‌ய‌ம் ஒன்றை இழ‌ந்தே ஆக‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் அன்று முத‌ல் இன்று வ‌ரை இருந்து வ‌ரும் அறுவ‌றுக்க‌த்த‌க்க‌ ப‌ழ‌க்க‌ம் அன்றாட‌ம் எப்ப‌டியும் ப‌ர‌வ‌லாய் அர‌ங்கேறிக்கொண்டு தான் இருக்கிற‌து என்ப‌தை யாரும் ம‌றுக்க‌விய‌லாது......

Canada. Maan. A. Shaikh said...

வரதட்சணை விசியத்தில் என் பெற்றோர்கள் செய்த தவறை நான் அல்லாஹ் மீது சத்தியமாக செய்யமாட்டேன் என் மகானுக்கு நம் சண் மார்க்க வழியில் அவன் வாழ்க்கை தொடங்க இங்கு கருதிடும் அணைத்து சகோரர்கல்லும் துவா செய்யவும்.

Meerashah Rafia said...

இன்ஷா அல்லாஹ். Bro. Muhammadh Yousuf & Canada. Maan. A. Shaikh அவர்களின் சீரிய எண்ணத்திற்கேற்ப அல்லாஹ் ஹலாலான சம்பாத்தியத்தில் செல்வத்தை கொடுத்து வீடு என்ற வரதட்சணையை விட்டு பாதுகாப்பானாக.ஆமீன்..

இது போல் உறுதியான எண்ணத்தையும்,சூழ்நிலையையும் அல்லாஹ் அனைவருக்கும் கொடுப்பானாக.. ஆமீன்..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு